எமது வேட்டல்

நோக்கம்

உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழியின் மொழி வளம், வாழ்வியல் நெறிமுறைகள், பண்பாட்டு விழுமியங்களைப் பரந்துபட்டபுரிதலோடு, அனைத்து மக்களுக்கும் தமிழ்க் கல்வி மூலம் கொண்டு சேர்த்தல்.

திட்ட வடிவம் 1

தமிழ் மொழியைப் பயில விரும்பும் யாவருக்கும், தமிழ் மொழியை எழுத, படிக்க, பேசப் பயிற்றுவித்தல்.

திட்ட வடிவம் 2

உலக அளவில் உள்ள தமிழ் சார்ந்த பெரு நிறுவனங்கள், ஆய்வு மையங்கள், குழுக்கள், குழுமம் மற்றும் அமைப்புகளோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு தமிழ்த் தொண்டாற்றுதல்.

திட்ட வடிவம் 3

உலகின் மிகத் தொன்மையான தமிழ் மொழி மூலமாக உலகில் வாழும் பல்வேறு மொழி பேசும் தேசிய இனங்களோடு கல்வி சார்ந்த இணக்கமான சூழலை உருவாக்கிச் சமூக ஒருங்கிணைவு ஒற்றுமையைப் பேணுதல்.

திட்ட வடிவம் 4

நமது வாழ்வியல், மரபு, கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த கருத்துகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் பொருட்டுக் கருத்தரங்குகள், பயிலரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் நிகழ்த்துதல்.

திட்ட வடிவம் 5

தமிழ் மொழி சார்ந்த கல்வியைத் தொடர விரும்புவோர் பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை உலகத்தரமான கல்வி நிறுவனங்களில் கற்பதற்கும், பெறுவதற்கும் தொடர்பு மையமாகச் செயலாற்றுதல்.

திட்ட வடிவம் 6

தமிழ் மொழிக் கல்வியை அயலகத் தமிழ்த் தலைமுறையினருக்கு எளிய முறையில் எடுத்துச் செல்லும் பொருட்டு
தமிழறிஞர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் வழிகாட்டுதலோடு ஆய்வுகள் மேற்கொள்ளுதல்.

திட்ட வடிவம் 7

தமிழ் மொழியின் மேல் இளைய தலைமுறையினருக்கு ஆர்வம் ஏற்படுத்தும் விதமாகத் தமிழ் மொழி சார்ந்த போட்டிகளை நடத்துதல் மற்றும் இளைய தலைமுறையினரை உலகளாவிய போட்டிகளில் பங்கேற்கும் வண்ணம் வழிகாட்டுதல்.

தொலை நோக்கு

அயர்லாந்து தமிழ்க் கல்விக் கழகம் தமிழ் மொழியின் மேன்மையைப் பறைசாற்றி, உலகளாவிய பார்வையோடு, உயர்தரத் தமிழ் மொழிவளர் மையமாக உருவெடுத்து, அனைவரின் ஒத்துழைப்போடு தமிழ் மொழி,கலை, இலக்கியம், பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றும்.

From the Desk of Principal

அன்புடையீர்.

தமிழ் வணக்கங்களும் வாழ்த்துக்களும்

கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி

அயர்லாந்து தமிழ் கல்விக்கழகத்தின் சிறார்களுக்கான தமிழ்ப்பள்ளி கடந்த 18 /10 /2020 அன்று முதல் தொடங்கப் பெற்று செம்மையாக நடைபெற்று வருகின்றன.
83 மாணவர்களும் 14 தன்னார்வலர் ஆசிரியர்களைக் கொண்டு ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன. குழந்தைகளின் வயது மற்றும் தமிழ் திறன் ஆகியவற்றைப் பொருத்து வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடப் புத்தகங்கள், பயிற்சி ஏடுகள், மற்றும் கையெழுத்து பயிற்சி ஏடுகள் ஆகியவை விரைவில் வினியோகிக்கப்படும்.
பெற்றோர்கள் உலக தமிழ் கல்விக்கழகத்தின் இணைய தளத்திற்கான கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இணையதளத்தில் உள்ள பாட நூல்களையும் பயன்படுத்தலாம்.

பெற்றோர்கள்  தொடர்ந்து தங்கள் இல்லங்களிலும் தங்கள் குழந்தைகளோடு தமிழில் உரையாடுவதும் புதிய புதிய சொற்களை அறிமுகப்படுத்துவதும் குழந்தைகளின் தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும்.

மேலும் அயர்லாந்து தமிழ்க் கல்விக் கழகம் முன்னெடுக்கும் சிறார்களுக்குத் தமிழ் மொழிப் பயிற்சி, இளையோர் மற்றும் வயது வந்தோருக்குத் தமிழ் கலை, இலக்கியம், பண்பாட்டு விழுமியங்கள் தொடர்பான பயிற்சிப் பட்டறைகள் கருத்தமர்வுகள், மற்றும் ஆய்வுகள் ஆகியவற்றுக்கும் தங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறோம்.

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

என்றும் அன்புடன்

இராசகுமார் சம்பந்தம்

முதல்வர்
அயர்லாந்து தமிழ் கல்விக்கழகம்

Recent News

12 May 2023

பெற்றோர்கள் அனைவருக்கும் அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகத்தின் வணக்கங்களும் வாழ்த்துகளும்,

நமது கல்விக்கழகத்தின்  பாடத்திட்டங்கள் கடந்த செப்டம்பர் 2-வது  வாரம் தொடங்கப்பட்டு செம்மையாக நடைபெற்று வருகின்றது. தங்களின் மேலான  ஆதரவுக்கும் ஒத்துழைப்பிற்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நமது பாடத்திட்டம் வரும் ஜூன் 2- ம் நாளுடன்  முடிவடைய  இருக்கின்றது. மாணாக்கர் அடுத்த நிலைக்கு உயர்த்தப்படுவது கீழ்க்காணும் பிரிவுகளில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இருக்கும்.
1. வருகைப் பதிவு (குறைந்தளவு 80%)
2. வார மற்றும் மாதாந்திர தேர்வு
3. வீட்டுப்பாடம்
எனவே தங்களின் குழந்தைகள் சில வரங்களுக்கான வீட்டுப் பாடங்கள் மற்றும்  தேர்வு நாட்களைத் தவற விட்டிருந்தால் அவற்றை வகுப்பாசிரியரிடம் தெரிந்துகொண்டு , கல்வி ஆண்டின் இறுதி நாளுக்குள் நிறைவு செய்து வகுப்பாசிரியருக்குத் தெரிவிக்குமாறு  கேட்டுக்கொள்கிறோம்.  மேற்கூறிய தரவுகள் தங்கள் வகுப்பாசிரியரால் முழுமையாக இணையப் பதிவேட்டில் உள்ளீடு செய்தால் மட்டுமே, கலிபோர்னியா தமிழ்க்கல்விக்கழக இணைய தளம் நமது மாணாக்கரின் நிலை உயர்த்தும்.

நமது ஆண்டு விழாவில் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையை இங்கே இணைத்துள்ளோம், தங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருப்பின் எங்களைத் தயங்காமல் தொடர்புகொள்ளவும். மேலும் வரும் கல்வி ஆண்டிற்கான கட்டணம் மற்றும் புதிய ஆசிரியர்கள் தேவை குறித்து கலந்துரையாட வரும் (மே 14 2023)ஞாயிறு மாலை 6 மணிக்கு இங்கே இணைக்கப்பட்டுள்ள ZOOM இணைப்பில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Zoom Link:  Refer Your ITA Registered Email

அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணாக்கர் சேர்க்கை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதையும் தங்களுக்குத் தெரிவித்து மகிழ்கிறோம்..

கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி.

நன்றி
இராசகுமாரன் சம்பந்தம்
முதல்வர்,அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம்

Our Affiliates